×

தமிழ் வளர்ச்சித் துறையின் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’: டிச. 31க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு’ வரும் டிசம்பர் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இதுவரை மென்தமிழ் (தமிழ்ச் சொல்லாளர்) (2013), விருபா – வளர்தமிழ் நிகண்டு (2014), விவசாயம் (2015), தமிழ்புலவர் (2016), பிரிபொறி (2017), தமிழ் உரைவழி பேச்சு உருவாக்கி (2018), ‘வாணி’ தமிழ்ப் பிழைத் திருத்தம் (2019), ‘செவ்வியல் இலக்கண – இலக்கியம்’ (2020), வட்டெழுத்து (2021), ‘தமிழ்ப்பேச்சு’ மேம்படுத்திய பதிப்பு (2022) உள்ளிட்ட மென்பொருட்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 2023க்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனி நபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்கள், செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருட்கள் 2020, 2021, 2022ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இந்த விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) அல்லது http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிசம்பர் 31ம்தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 – 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

The post தமிழ் வளர்ச்சித் துறையின் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’: டிச. 31க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Development Department ,Chennai ,Dinakaran ,
× RELATED பாவேந்தரின் 133வது பிறந்த நாள்...